Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 5 செப்டம்பர், 2011

பரிசுத்த வேதாகமம் எப்படிப்பட்ட புத்தகம்? Dr. செல்வின்

கன்மலையை நொறுக்கும் சம்மட்டியான ஆண்டவருடைய வசனம் பாவத்தினால் கடினமடைந்திருக்கும் கற்பாறை போன்ற இருதயத்தை உடைக்க வல்லதாக இருக்கிறது. இருபுறமும் கருக்குள்ள எந்தப்பட்டயத்திலும் கருக்கானதான ஆவியின் பட்டயமாகிய தேவனுடைய வார்த்தை ஆவியையும் ஆத்துமாவையும் உருவக்குத்துகிறதாய், பாவ உணர்வை உண்டாக்குகிறது.
அழிவில்லாத வித்தும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதுமான தேவனுடைய வசனம் பாவத்தில் மரித்திருக்கும் ஆத்துமாவை உயிர்ப்பிக்க வல்லதாய் இருக்கிறது. ஆத்துமாவை இரட்சிக்க வல்லமையுள்ள இந்த சத்திய வசனத்தினாலேயே தேவன் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாக ஜெநிப்பிக்கிறார்.

தேவனுடைய வசனம் தெளிதேனிலும் மதுரமானது, இனிமையானது. அது வாசிப்பவர்களுக்குத் தெவிட்டாத இன்பத்தைக் கொடுக்கிறது. மறுபடியும் பிறந்து, விசுவாசத்தில் பாலகராக இருப்பவர்களுக்கு களங்கமில்லாத ஞானப்பாலாக இருக்கும் வேதவசனம் விசுவாசத்தில் வளர்ச்சி அடைந்தவர்களுக்கு சத்து நிறைந்த, பெலன் கொடுக்கக்கூடிய ஞானஆகாரமாய் இருக்கிறது.

பரிசுத்த வேதாகமத்தை ஓர் ஆன்மீகக் கண்ணாடி என்று அழைக்கலாம். தேவன் எப்படிப்பட்டவர்?என்பதையும் வேதம் போதிக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைக்கண்ணாடி முன் நின்று நம்மை நாம் பார்த்து சரிசெய்து கொள்வது போல வேதாகமத்தை ஒவ்வொரு நாளும் வாசிக்கும்போது நம்முடைய உள்ளத்தை ஆராய்ந்து நம்முடைய வாழ்க்கையை நிதானித்து நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.

தண்ணீரைப்போல தேவனுடைய வசனம் சுத்திகரிக்கும் தன்மை கொண்டதாயிருக்கிறது. அக்கினியைப்போலான கர்த்தருடைய வார்த்தை பாவ அழுக்கைப் போக்கி உள்ளத்தையும் மனதையும் சுத்திகரிக்க வல்லதாயிருக்கிறது.
அந்தகாரம் நிறைந்த இந்த உலகில் நாம் செய்யும் அன்றாடகத் தீர்மானங்கள் ஆண்டவருடைய விருப்பத்திற்கிசைய அமைவதற்காக நம்முடைய வாழ்க்கைக்குத் திசை காட்டும் தேவனுடைய வசனம் கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
பரிசுத்த வேதாகமம் ஆன்மீக வியாதியாகிய பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்களைக் குணமாக்குகிறது. வேதத்தின் வசனங்கள் மனிதரின் சரீர, மன நோய்களை நீக்கி அவர்களுக்கு ஆரோக்கியம் அருளும் ஆற்றல் கொண்டவவைகளாக இருக்கிறன்றன. அன்றாடக வாழ்க்கையின் உள்ளம் புண்படக்கூடிய சூழ்நிலைகளில் பரிசுத்த வேதாகமத்தின் வசனங்கள் ஆறுதல் தருபவைகளாகவும் காயத்தை ஆற்றுகின்றவைகளாகவும் இருக்கின்றன.
கீழ்காணும் வேதவசனங்களை படித்துப் பாருங்கள்!
எரேமியா 23:29
எபிரெயர் 4:12
1 பேதுரு 1:23
சங்கீதம் 119:25
சங்கீதம் 19:10
1 பேதுரு 2:3
எபிரெயர் 5:23
யாக்கோபு 1:23
எபேசியர் 5:26
சங்கீதம் 119:105
நீதிமொழிகள் 4:22
ரோமர் 15:4
எபேசியர் 6:17
குறிப்பு: இந்த வசன எண்களை கவனித்திருப்பீர்களானால், 23 என்ற எண் அடிக்கடி வருவதை காணலாம்.

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular