Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 5 செப்டம்பர், 2011

புனித வேதாகமத்தின் வரலாறு பகுதி மூன்று

சகோ.M.S.வசந்தகுமார்

ஜேம்ஸ் அரசனின் அங்கீகாரம் பெற்றிருந்த ஆங்கில வேதாகமம், பிரசுரிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே மூன்று பதிப்புகள் வெளிவந்த 13ஆம் நூற்றாண்டில், கென்டபரியின் பிரதான பிஷப்பாக இருந்த ஸ்டீவன் லங்டன் என்பவருடைய அதிகாரப் பிரிவும், 1551 இல் ராபர்ட் எஸ்டீன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட வசனப் பிரிவுகளும் இம்மொழிபெயர்ப்பில் இடம் பெற்றிருந்தன. 1615இல், இம்மொழிபெயர்ப்பில் இருந்த நூற்றுக்கணக்கான எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டன. 1629 இல், மறுபடியுமாக இம்மொழி பெயர்ப்பு திருத்தப்பட்டதோடு, அதுவரை காலமும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்த தள்ளுபடியாகமங்கள் நீக்கப்பட்டன. 1638 இல், மறுபடியுமாக இவ்வேதாகமம் திருத்தப்பட்டது. இம் மொழிபெயர்ப்பின் 1701 இன் லொயிட்ஸ் பதிப்பில், பிரதான பிஷப் அஷர் என்பவருடைய வேதாகமச் சம்பவங்களின் காலக்குறிப்புகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமம், 1762 இல் பாரீஸ் என்பவரால் கேம்பிரிஜ் வேதாகமம் என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இதில் 383 விளக்கக் குறிப்புகள் சேர்க்கப்பட்டிருந்தன. 1769இல் இது ஒக்ஸ்போர்ட் வேதாகமம் என்னும் பெயரில் சில திருத்தங்களுடன் ப்லேய்னி என்பவரினால் வெளியிடப்பட்டது. இதன் பிறகு இவ்வேதாகமமே ஆங்கில கிறிஸ்தவ சபையினது வேதாகமமாக இருந்தபோதிலும், பிற்காலத்தில் வெளியிடப்பட்ட இதன் பதிப்புகளில், ஒரு சில திருத்தங்களும் செய்யப்பட்டன.
1611 முதல் 1881 வரை ஜேம்ஸ் அரசனின் பதிப்பு வேதாகமமே ஆங்கில கிறிஸ்தவ உலகில் தனிப் பெரும் வேதாகமமாக இருந்த போதிலும் காலத்துக்குக்காலம் சிலர் புதிய மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். பழைய கையெழுத்துப் பிரதிகள் சில கிடைத்தமையினால் அவற்றையும் ஆராய்ந்து பார்த்து சில திருத்த மொழிபெயர்ப்புகளும் வெளிவரத் தொடங்கின. 17ஆம் நூற்றாண்டில், ஹென்றி ஹம்மொண்ட் (1653இல்), வூட் ஹெட், அலெஸ்ட்ரி, வோக்கர் (1675 இல்), ரிச்சர்ட் பெக்ஸ்ட்டர் (1685 இல்) என்போரது விளக்க மொழிபெயர்ப்பு வேதாகமங்கள் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டன. 18ஆம் நூற்றாண்டில் மோர் (1729 இல் பு.ஏ.), வீட்டன் (1745 இல்), ஜான் வெஸ்லி (1755 இல்) என்போரும், இன்னும் சிலரும் ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்துள்ளனர். 19 ஆம் நூற்றாண்டில் இதைவிட அதிகமானோர் ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்துள்ளனர். இவர்களில் தாம்சன் (1808 இல்), அலெக்சாண்டர் (1822 இல்), நோவா வெப்ஸ்டர் (1833 இல்), பென் (1836 இல் பு.ஏ.), கென்றிக்ஸ் (1842 இல் பு.ஏ.), ப்ரெண்டன்(1844 இல் ப.ஏ.), நோர்ட்டன் (1855 இல் சுவிசேஷங்கள்) கொனன்ட்ஸ் (1857 பு.ஏ.), ப்ரோம்ஃபீல்ட் (1863 சுவிசேஷங்கள்), அன்டர்சன் (1865 பு.ஏ.), பெளவர் (1870 பு.ஏ.), அல்பிரட் (1870 பு.ஏ.), ரொதர்ஹம் (1872 இல் பு.ஏ.), ஜூலியா ஸ்மித் (1876 இல்) என்போர் முக்கியமானவர்கள். இவ்வாறு பலர் புதுப்புது ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தயாரித்தபோதிலும் பெரும்பாலான ஆங்கிலக் கிறிஸ்தவர்கள், ஜேம்ஸ் அரசனுடைய அங்கீகரிக்கப்பட்ட பதிப்பு வேதாகமத்தையே தேவ வார்த்தையாகக் கருதி, அதையே உபயோகித்து வந்துள்ளனர்.
(5) அண்மைக்கால ஆங்கில வேதாகமங்கள்
அண்மைக்காலத்தில் நூற்றுக்கும் அதிகமான புதிய மொழிபெயர்ப்பு வேதாகமங்கள் ஆங்கில மொழியில் வெளிவந்துள்ளன. இவற்றுள் பல, தனிப்பட்ட நபர்களது மொழி பெயர்ப்புகளாகும். சில, சகல சபைகளையும் சேர்ந்தவர்களைக் கொண்ட குழுவினரது முயற்சியினால் வெளியிடப்பட்டவைகளாகும். அண்மைக் காலங்களில் வேதாகமப் புத்தகங்களின் பழைய கையெழுத்துப் பிரதிகள் சில கிடைத்துள்ளமையினால், அவற்றை அடிப்படையாய்க் கொண்டு மூல மொழியின் சரியான அர்த்தத்தைத் தரும் வண்ணம் வேதாகமத்தை மொழிபெயர்க்கக் கூடிய வசதிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், இன்று வெளிவரும் ஆங்கில மொழி பெயர்ப்பு வேதாகமங்கள் ஜேம்ஸ் அரசனது அங்கீகரிக்கப்பட்ட பதிப்பைவிட சிறப்பான மொழி பெயர்ப்புகளாக உள்ளன. ஆனால் ஆரம்பகாலத்தில், ஜேம்ஸ் அரசனது பதிப்பு வேதாகமத்தைத் திருத்தி மொழிபெயர்க்க வேண்டும் என கூறியவர்களது கருத்துக்கள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகின.
எனினும் 1870 இல் வின்செஸ்ட்டர் இன் பிஷப்பான வில்பர்ஃபோஸ் என்பவரது முயற்சி காரணமாக, ரோமன் கத்தோலிக்கச் சபை தவிர்ந்த ஏனைய சபைகளைச் சேர்ந்தவர்களைக் கொண்ட ஒரு குழு, ஒரு புதிய வேதாகம மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டது. இக்குழுவினர் இரு பிரிவாகப் பிரிந்து, ஒரு பகுதியினர் இங்கிலாந்திலும் மறுபகுதியினர் அமெரிக்காவிலுமாக மொழி பெயர்ப்புப் பணியை ஆரம்பித்தனர். இங்கிலாந்து குழுவினர் தமது திருத்தப்பட்ட புதிய ஏற்பாட்டை 1881இலும், பழைய ஏற்பாட்டை 1885இலும் வெளியிட்டனர். எனினும், அமெரிக்க குழுவினர் 1901 இலேயே தமது மொழிபெயர்ப்பைப் பிரசுரித்தனர்.
இது, அமெரிக்க தராதரப் பதிப்பு என்னும் பெயரில் வெளிவந்ததோடு, இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட திருத்தப் பதிப்பைவிட வித்தியாசமான மொழிநடையிலேயே இருந்தது. இத்திருத்தப்பட்ட மொழி பெயர்ப்பு வேதாகமங்கள் ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்றாலும்கூட, ஜேம்ஸ் அரசனது பதிப்பை வாசித்துப் பழகியவர்களது எதிர்ப்புகளுக்கும் விமர்சனத்துக்கும் முகங்கொடுக்க வேண்டியதாயிருந்தது. இம்மொழி பெயர்ப்புகளால், ஜேம்ஸ் அரசனது பதிப்பை மக்கள் உபயோகிப்பதை நிறுத்த முடியாது போய்விட்டது.
அண்மைக்காலங்களில் வேதாக மத்தின் பல பழைய கையெழுத்துப் பிரதிகள் கிடைத்துள்ளதோடு, புதிய ஏற்பாடானது ஆரம்பத்தில், முதலாம் நூற்றாண்டின் சாதாரண பேச்சு மொழியான கொய்னி என்னும் கிரேக்கத்திலேயே எழுதப்பட்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வேதாகமம் உயர்தர மொழி நடையிலேயே இருக்கவேண்டும் என நீண்ட காலமாக இருந்து வந்த கருத்தும் மாறத் தொடங்கியது. இதனால், அன்றாட பேச்சு மொழியிலான இலகு மொழிநடையில் பல ஆங்கில வேதாகமங்கள் வெளிவரத் தொடங்கின. இவற்றுள், 1885 இல் வெளிவந்த ஹெலன் ஸ்புரல் என்பவரது சாதாரண மொழியிலான பழைய ஏற்பாடும், 1895 இல் வெளிவந்த ஃபெரர் ஃபென்டன் என்பவரது இலகு மொழி நடையிலான புதிய ஏற்பாடும், 1905 இல் வெளிவந்த அவரது பழைய ஏற்பாடும், 1899 இல் பிரசுரமான 20 ஆம் நூற்றாண்டு புதிய ஏற்பாடும், 1913 இல் வெளிவந்த ஜேம்ஸ் மொஃபட் என்பவரின் புதிய ஏற்பாட்டின் புதிய மொழிபெயர்ப்பும், (1924இல் பழைய ஏற்பாட்டையும் இவர் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்). 1903 இல் பிரசுரமாகிய ரிச்சர்ட் வேமத் என்பவரின் நவீன பேச்சிலான புதிய ஏற்பாடும், 1923 இல் வெளி வந்த எட்கர் குட்ஸ்பீட் என்பவரின் புதிய ஏற்பாட்டின் அமெரிக்க மொழி பெயர்ப்பும், 1927 இல் வெளியிடப்பட்ட ஸ்மித், கோர்டன், மீக், வோட் டர்மன் என்போரது பழைய ஏற்பாட்டின் அமெரிக்க மொழி பெயர்ப்பும், 1924 இல் பிரசுரமாகிய மொன்ட் கோமரி இன் மொழி பெயர்ப்பும், 1923 இல் பெலன்டைன் என்பவரினால் வெளியிடப்பட்ட ரிவர்சைட் புதிய ஏற்பாடும், 1947ஆம் ஆண்டிலிருந்து வெளிவரத் தொடங்கிய ஜே.பி.பிலிப்ஸ் என்பவரது பேச்சுமொழி நடையிலான மொழி பெயர்ப்பும், 1956 முதல் 1559 வரையிலான காலப் பகுதியில் வெளிவந்த வூஸ்ட்டின் விரிவுபடுத்தப்பட்ட புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பும், 1958 இற்கும் 1965 இற்கும் இடைப்பட்ட காலத்தில் பிரசுரமான அம்பிலிஃபைட் பைபிளும், 1901இல் வெளிவந்த ஏ.எஸ்.வேஸ் என்பவரின் நிருபங்களின் புதிய பதிப்பும், 1955 இல் வெளிவந்த ஸ்கோபீஃல்ட் இன் புதிய ஏற்பாடும், 1959ல் பிரசுரமான நவீன ஆங்கிலத்திலான பேர்க்ளி பதிப்பும் முக்கியமானவைகளாகும். இன்று இதைப்போன்ற இலகு மொழி நடையிலான பல ஆங்கில மொழி பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.
தனிப்பட்டவர்களுடைய இலகு மொழிநடையிலான ஆங்கில வேதாகமங்கள் மட்டுமல்ல, பல சபைகளைச் சேர்ந்த குழுவினால் மொழி பெயர்க்கப்பட்ட சில புதிய ஆங்கில மொழி பெயர்ப்பு வேதாகமங்களும் அண்மை காலத்தில் வெளிவந்துள்ளன. இவற்றில் 1946இல் வெளிவந்த திருத்தப்பட்ட தராதரப் பதிப்பு (ஆர்.எஸ்.வி) வேதாகமம் முதலிடம் பெறுகின்றது.

  2 கருத்துகள்:

  1. மிகவும் பிரயோசனமாயுள்ளது. இதன் பிரதிகளை எனக்கும் அனுப்புவீர்களா? நன்றி

    பதிலளிநீக்கு
  2. இந்த ப்ருன்ஸ்டாட் போலி கிறிஸ்தவ சபை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்

    brunstadchristianchurchreview.blogspot.in

    பதிலளிநீக்கு

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular