புனித வேதாகமத்தின் வரலாறு பகுதி இரண்டு
சகோ.M.S.வசந்தகுமார்
1901இல் வெளியிடப்பட்ட அமெரிக்க தராதரப்
பதிப்பின் பதிப்புரிமை, மார்க்க கல்விக்கான சர்வதேச சங்கத்திடம்
ஒப்படைக்கப்பட்டது. இச்சங்கம், 1937 ல் அமெரிக்க தராதரப் பதிப்பைத்
திருத்தி மொழி பெயர்த்து வெளியிடுவதற்கு ஒரு குழுவை நியமித்தது. 32 வேத
பண்டிதர்களும் 50 ஆலோசகர்களும் இக்குழுவில் பணியாற்றினர். இவர்களது
முயற்சி காரணமாக 1946இல் புதிய ஏற்பாடும், 1952இல் முழு வேதாகமமும்
திருத்தப்பட்ட தராதரப் பதிப்பு எனும் பெயரில் வெளிவந்தது. அதே சமயம்,
லொக்மேன் எனும் நிறுவனம், அமெரிக்கப்பதிப்பின் புதிய திருத்தப்பட்ட
மொழிபெயர்ப்பு ஒன்றை 1971 இல் வெளியிட்டது. இது புதிய அமெரிக்க தராதரப்பதிப்பு (என்.ஏ.எஸ்.பி) என அழைக்கப்படுகின்றது.
அமெரிக்க தராதரப்பதிப்பை அமெரிக்கர்கள்
திருத்தி வெளியிட்டபடியால், இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட
பதிப்பு வேதாகமத்தை மறுபடியுமாகத் திருத்தி வெளியிடும் முயற்சிகள் 1930 இல்
ஆரம்பமாகின. எனினும், 1939 இல் ஏற்பட்ட இரண்டாவது உலக மகா யுத்தத்தினால்
இப்பணி பாதிக்கப்பட்டது. பின்னர் 1946ல் ஸ்காட்லாந்து சபையின் பொதுச்
சங்கம் இப்பணியை ஆரம்பிக்கத் தீர்மானித்து, இங்கிலாந்திலுள்ள ரோமன்
கத்தோலிக்கச் சபை தவிர்த்த ஏனைய சபைகளின் கூட்டுறவுடன் 1947 இல் ஒரு மொழி
பெயர்ப்புக் குழுவை நியமித்தது. இக்குழுவினரது முயற்சி காரணமாக, 1961 இல்
புதிய ஏற்பாடும், 1965இல் பழைய ஏற்பாடு உட்பட முழுவேதாகமமும் புதிய ஆங்கில
வேதாகமம் எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
1610இல் ரோமன் கத்தோலிக்கச் சபையினால்
வெளியிடப்பட்ட டூவாய் எனும் ஆங்கில வேதாகமம் பிஷப் சலோனர் என்பவரினால்
திருத்தப்பட்டது. இவர் கி.பி.1749இற்கும் 1772இற்கும் இடைப்பட்ட காலத்தில்
புதிய ஏற்பாட்டை 5 தடவைகள் திருத்தி வெளியிட்டதோடு, 1750 இலும் 1763 இலும்
பழைய ஏற்பாட்டையும் இரு தடவைகள் திருத்தி வெளியிட்டார். 1810லிருந்து,
அமெரிக்காவிலுள்ள ரோமன் கத்தோலிக்கச் சபையும் இத்திருத்தப்பட்ட
மொழிபெயர்ப்பை உபயோகிக்கத் தொடங்கியது. இதைவிட ஒரு சில ரோமன்
கத்தோலிக்க வேதபண்டிதர்களது தனிப்பட்ட ஆங்கில மொழி பெயர்ப்பு
வேதாகமங்களும் 19ஆம் நூற்றாண்டில் வெளிவந்துள்ளன. சலோனரின் மொழி
பெயர்ப்பு மறுபடியுமாகத் திருத்தப்பட்டு, 1941இல் புதிய ஏற்பாடு
அமெரிக்காவில் பிரசுரமாகியது. இத்திருத்த மொழிபெயர்ப்பு, அமெரிக்க
கத்தோலிக்க வேதாகம ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டதாகும்.
இதன் பின்னர் எபிரேய மொழியிலிருந்து நேரடியாக ஆங்கிலத்துக்கு மொழி
பெயர்க்கப்பட்ட ரோமன் கத்தோலிக்கச் சபையினரது பழைய ஏற்பாட்டு மொழி
பெயர்ப்பு நான்கு பகுதிகளாக 1948 முதல் 1969 வரையிலான காலப்பகுதியில்
வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட ரோமன்
கத்தோலிக்க சபையின் புதிய ஏற்பாடு, லத்தீன் மொழிபெயர்ப்பை அடிப்படையாய்க்
கொண்டிருந்தமையினால் 1970இல், மூலமொழியான கிரேக்கத்திலிருந்து நேரடியாக
ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாட்டையும் அமெரிக்க
கத்தோலிக்க வேதாகம ஒன்றியம் வெளியிட்டது. இவர்களது மொழி பெயர்ப்பு
வேதாகமம், புதிய அமெரிக்க வேதாகமம் என அழைக்கப்படுகின்றது. இதேபோல,
இங்கிலாந்திலும், வெஸ்ட்மின்ஸ்டர் பதிப்பு எனும் பெயரில் ரோமன்
கத்தோலிக்க ஆங்கில மொழி பெயர்ப்பு வேதாகமம் பிரசுரிக்கப்பட்டது. இது
கட்பர்ட் லெட்டர் என்பவரது முயற்சியினால் தயாரிக்கப்பட்ட
மொழிபெயர்ப்பாகும். இதன் புதிய ஏற்பாடு 1948ல் வெளிவந்தது. பழைய
ஏற்பாட்டுப் புத்தகங்கள் 1935லிருந்து வெளிவரத் தொடங்கியபோதிலும் 1954ல்
ஏற்பட்ட லெட்டரின் மரணம் இம்மொழி பெயர்ப்பு பூர்த்தியடைவதைத்
தடுத்துவிட்டது.
1945ல் ஆர்.ஏ. நொக்ஸ் என்பவர் புதிய
ஏற்பாட்டையும், 1949ல் பழைய ஏற்பாட்டையும், 1955ல் இரு ஏற்பாடுகளை
ஒன்றாகவும் வெளியிட்டார். இதற்கு இங்கிலாந்திலுள்ள ரோம சபையின் அங்கீகாரம்
கிடைத்தது. இது லத்தீன் மொழிபெயர்ப்பை அடிப்படையாய்க் கொண்டு மொழி
பெயர்க்கப்பட்ட ஆங்கில வேதாகமமாகும். பின்னர் வத்திக்கானின் 2வது ஆலோசனைச்
சங்கத்தின் விளைவாக (1963-1965) வேதாகமத்தை வெளியிடுவதில் ரோமன்
கத்தோலிக்கச் சபை மற்ற சபைகளுடன் இணைந்து பணிபுரியும் முயற்சி உருவானது.
இதனால் 1965ல் திருத்தப்பட்ட தராதரப்பதிப்பு வேதாகமத்தின் புதிய
ஏற்பாட்டையும், 1966ல் பழைய ஏற்பாட்டையும் ரோமன் கத்தோலிக்கச் சபை
வெளியிட்டது.
இதன் பின்னர் 1967ல், ரோமன் கத்தோலிக்க சபை எருசலேமில் வெளியிட்ட ஆங்கில வேதாகமம் “எருசலேம் பைபிள்”
என அழைக்கப்படுகிறது. இது எபிரேய, கிரேக்க, அரமிக், பிரான்ஸ் மொழி
வேதாகமங்களை அடிப்படையாய்க்கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட
வேதாகமமாகும்.
1962ஆம் ஆண்டு அமெரிக்க வேதாகமச் சங்கம்
அன்றாட மொழியில் ஆங்கிலத்தில் ஒரு புதிய மொழிபெயர்ப்பைத் தயாரிக்கும்
பணியை ஆரம்பித்தது. இதன் பயனாக 1966ல் நவீன மனிதனுக்கான நற்செய்தி எனும்
தலைப்பில் புதிய ஏற்பாடும் 1976 இல் முழுவேதாகமமும் “குட்நியூஸ் பைபிள்”
எனும் பெயரில் வெளிவந்தது. இதைத் தவிர இன்னும் சில ஆங்கில மொழி பெயர்ப்பு
வேதாகமங்களும் தற்சமயம் வெளிவந்துள்ளன. இவற்றுள் முக்கியமானது இன்று
பெரும்பாலான மக்களால் உபயோகிக்கப்படும், புதிய சர்வதேசப் பதிப்பு
வேதாகமமாகும் (என்.ஐ.வி.). இதை வெளியிட வேண்டும் எனும் கருத்து
அமெரிக்காவிலுள்ள இலிநொஸ் என்ற இடத்தில் 1965 இல் கூடிய சகல சபைகளையும்
சார்ந்த வேத பண்டிதர்களால் வலியுறுத்தப்பட்டது. இக்கருத்துக்கு அதிக ஆதரவு
கிடைத்தமையினால் 1966 இல் சிக்காகோ எனுமிடத்தில் கூடிய சபைத்தலைவர்களது
கூட்டத்திலும் இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 1967 இல் நியூயார்க்
சர்வதேச வேதாகமச்சங்கம் இப்பணியைப் பொறுப்பேற்றது. இதன் பயனாக 1973இல்
புதிய ஏற்பாடும், 1978இல் முழு வேதாகமமும் “புதிய சர்வதேச பதிப்பு”
எனும் பெயரில் வெளிவந்தது. இன்றிருக்கும் ஆங்கில வேதாகமங்களில் இதுவே
சிறப்பானதாகக் கருதப்படுவதோடு பெரும்பாலான கிறிஸ்தவர்களால்
உபயோகிக்கப்பட்டும் வருகின்றது.
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....