சர்வ வல்லமை பொருந்தியவர்
ஒரு ஊரில் பலசாலியான வாலிபன் ஒருவன் இருந்தான். அவன் தன்
நேரத்தையெல்லாம் உடற்பயிற்சி செய்வதிலும், தன் பலத்தைக் கொண்டு அரிய பெரிய
செயல்களைச் செய்து முடிப்பதிலும் செலவிட்டான்.
அவனது பெற்றோர் அவனிடம்,""நீ இப்படி உன் சரீரத்தைப் பலப்படுத்துவதிலேயே இருந்தால், நாங்கள் சாப்பாட்டிற்கு என்ன செய்வோம்? யாரிடமாவது போய் வேலை செய்து பணம் சம்பாதித்து வா,'' என விரட்டினர்.
தன்னை விட அதிக பலசாலியாய் இருக்கும் ஒருவரிடமே வேலைக்குச் சேர்வேன் என்ற சபதத்துடன் அவன் புறப்பட்டான். ஒரு வழியாக ஒரு பலசாலியைக் கண்டுபிடித்து, அவனிடம் வேலைக்குச் சேர்ந்தான். இருவரும் அரிய பெரிய செயல்களைச் செய்து ஊர் மக்களை பிரமிக்க வைத்தனர். ஏராளமாக சம்பாதித்தனர்.
ஒருநாள், நள்ளிரவில் இருவரும் ஓரிடத்திற்கு கிளம்பினர். வழியில் ஒருமயானத்தைக் கடந்து செல்ல வேண்டியதாயிற்று. அந்த இடத்துக்குப் போனதுமே பெரிய பலசாலி கிடுகிடுவென நடுங்க ஆரம்பித்து விட்டான். இதை சிறிய பலசாலி கவனித்து விட்டான். ""ஏன் நடுங்குகிறாய்?'' எனக் கேட்டான்.
அதற்கு அவன்,""அங்கே ஒரு பிசாசு இருக்கிறது. அது என்னை அழித்து விடுமோ என்று பயப்படுகிறேன்,'' என்றான்.
""அப்படியானால், அந்தப் பிசாசு உன்னை விட பலசாலியா?'' என்றான் வாலிப பலசாலி.
"ஆம்' என்று அவன் தலையாட்டினான். அன்றுமுதல் இளைய பலசாலி, பெரிய பலசாலியிடம் வேலை பார்ப்பதை நிறுத்திவிட்டான்.
""நான் உன்னை விட பெரிய பலசாலியான அந்த பிசாசுக்கே சேவை செய்து கொள்கிறேன், நீ கிளம்பு,'' என சொல்லி அவனைக் கழற்றி விட்டான்.
பிசாசும் அவனை சேர்த்துக் கொண்டது. பிசாசுடன் சேர்ந்து மந்திர தந்திர வித்தைகளை எல்லாம் படித்தான் வாலிபன். நாட்கள் வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் ஓடியது. பிசாசும் இவனும் உயிருக்குயிரான நண்பர்களாகி விட்டனர்.
ஒருநாள் பிசாசுடன் பலசாலி ஒரு கிராமத்திற்குப் போனான். அங்கே ஒரு பக்தன் ஊக்கமாய் ஜெபித்துக் கொண்டிருந்தான். "இயேசுவின் ரத்தத்திற்கு ஜெயம்" எவ்று அவன் சொல்ல ஆரம்பிக்கவே, தன்னுடன் வந்த பிசாசு பயந்து நடுங்குவதைக் கண்டான். "ஏன் நடுங்குகிறாய்?' என வாலிபன் கேட்கவே,""நாம் இங்கு இருக்க வேண்டாம். இவன் இயேசுவின் நாமத்தைச் சொல்லுகிறான். அவரது நாமம் ஒலிக்குமிடத்தில் நான் இருக்கமாட்டேன்,'' என்றது.
ஆனால், வாலிபனோ, இந்த பிசாசை விட பலமுள்ளவர் ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் இயேசு என்ற பெயரையுடையவராகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து அந்த பக்தனிடம் வந்து இயேசு கிறிஸ்துவைக் குறித்து முழுவதுமாக அறிந்து, அவரை ஏற்றுக் கொண்டான்.
எல்லா பலசாலிகளையும் விட சர்வவல்லமையும் மகா பலமும் உள்ளவரைவணங்குவது தானே மேன்மை.
சர்வவல்லவர் நாமம் வாழ்க
பதிலளிநீக்கு