காத்திருக்கிறது நீதியின் கிரீடம்
இரவு நேரத்தில் நான்கு திருடர்கள் வந்து கொண்டிருந்தனர். இருட்டாக இருந்ததால், வழியில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனை, மரக்கட்டை என நினைத்து ஒருவன் மிதித்து விட்டான். அலறி எழுந்த அவனிடம் திருடன், "தவறுதலா மரக்கட்டைன்னு நினைச்சுட்டேன்' என்றான்.
தூங்கியவனோ கோபத்தில்,"" எந்த மரக்கட்டையாவது பணப்பையோடு தூங்குமா?'' என்று கேட்டான்.
இதைக் கேட்டதும் திருடர்கள் குஷியாகி விட்டனர்.
எப்படியாவது அந்த பண முடிப்பை அபகரிக்க முடிவெடுத்தனர். ஆனால், அவனோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. நான்கு பேரையும் எதிர்த்துப் போராடினான். இறுதியில் அந்த மனிதனை கட்டிப் போட்டு விட்டு, அவனிடம் இருந்த பணப்பையைப் பிடுங்கினர்.
ஒரு திருடன் ஆர்வமுடன் பையைப் பிரித்து பார்த்தான். அதில் மிகவும் சொற்ப பணமே இருந்தது. திருடர்கள் எரிச்சலும், ஏமாற்றமும் அடைந்தார்கள். ஆக, அந்தப் போராட்டம் பயனற்றதாகிப் போனது. ""பூமியிலே போராட மனுஷனுக்கு காலம் குறிக்கப்பட்டிருக்கிறது''(யோபு.7:1) என்றும், ""நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்'' (எபே.5:16) என்றும் பைபிள் நமக்கு கூறுகிறது.
இந்த பொல்லாத காலத்தில் மனிதன் எதற்கெல்லாமோ போராடுகிறான். பதவிக்காகவும், பணத்துக்காகவும் பிரயாசைப்படுகிறான்.
""பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள். நாமோ அழிவில்லாத கிரீடத்தை பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்''(1கொரி.9:25) என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்.
நீங்கள் அழிவுள்ள கிரீடத்தை பெற்றுக் கொள்ள போராடுகிறீர்களா அல்லது அழிவில்லாத கிரீடத்தைப் பெற்றுக் கொள்ள போராடுகிறீர்களா?
""நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மாம்சத்தோடும், இரத்தத்தோடு மட்டுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு'' (எபே.6:11,12) என்கிறது பைபிள்.
பவுல் தனது ஊழியத்தின் முடிவில் ""நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருள்வார் எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருள்வார்'' (11 தீமோ.4:7,8)'' என்கிறார்.
உங்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். நீதியின் பாதையில் நடந்து வாழ்வை பயனுள்ளதாக்குங்கள்.
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....