வேஷம் கலையும் ஒரு நாள்!
ஒருவன் சில புறாக்களை நல்ல உணவு கொடுத்து வளர்த்தான். இதைக் கண்ட ஒரு காகம், தானும் புறாவாக வேஷமிட்டால், மற்ற புறாக்களோடு கலந்து உழைக்காமல் சாப்பிடலாமே என எண்ணியது.
சுண்ணாம்புக் குழியிலே புரண்டு எழுந்து தன்கரிய நிறத்தை வெளுப்பாக்கிக் கொண்டது. புறாக்களைப் போலவே, தத்தி தத்தி நடக்கவும் பழகிக் கொண்டது. அவன் புறாக்களுக்கு உணவிடும் நேரத்தில், அவற்றுடன் சேர்ந்து கொண்டது. வயிறார உணவு கிடைத்தது. இப்படியே அந்த காகம் அவனை பல நாட்களாக ஏமாற்றி வந்தது.
ஒருநாள் அந்தப் பக்கம் எலி ஒன்று செத்துக் கிடந்தது. அதைக் கண்ட காகங்கள் எல்லாம் கூடின. விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் கரைய ஆரம்பித்தன.
புறா வேஷத்தில் இருந்த காகத்திற்கும் அங்கு செல்ல ஆசை வந்தது. புறாக்களின் மத்தியில் தன்னையும் மறந்து "கா... கா...' என்று கரைந்தபடி எலியை நோக்கிப் பறந்தது. இதைக் கண்ட அந்த மனிதன் கோபம் கொண்டான்.
அதேநேரம், எலியைத் தின்று கொண்டிருந்த இடத்திற்குச் சென்ற அந்த "வெள்ளை' காகத்தை, மற்ற காகங்கள் தங்களைப் போல் அது இல்லையே என எண்ணி கொத்த ஆரம்பித்தன. அவற்றிடம் இருந்து தப்பிய காகம்,
புறாக்கூட்டத்தோடு சேர எண்ணி திரும்பியது. ஆனால், உண்மையை அறிந்த மனிதனோ, அதை அடித்து விரட்டினான்.
வேஷத்தால் விளைந்த விபரீதத்தை எண்ணி காகம் வருந்தியது.
இந்த கதையைப் படிக்கும் அருமையானவர்களே!
ஆலயத்திற்கு வரும் பலர் பயப்படுவது போலவும், ஊழியம் செய்வது போலவும் இருக்கிறார்கள். பக்தியுடன் இருக்கும் இந்த நபரே மதுக்கடையிலும் முதல் ஆளாக இருக்கிறாரே என்று பார்க்கும் போது மனம் கஷ்டப்படுகிறது. பாவங்களைச் செய்து விட்டு, ஆலயத்திற்கு மட்டும் சென்றால் போதும் என நினைக்கிற மாய்மால பக்தர்கள் பரலோகம் செல்ல முடியாது.
""நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்தி பண்ணிப் போடுவேன்'' (வெளி.3:15,16) என்று கூறுகிறார் இயேசு நாதர்.
""நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம்
இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்'' (ரோமர்.12:2)
வாழ்நாள் முழுதும் கிறிஸ்துவில் வாழ தீர்மானம் கொள்ளுங்கள்.
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....