வம்பர்களிடம் நமக்கென்ன வேலை!
வம்புக்காரர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், விலகிச் செல்வதே நல்லது என்கிறது பைபிள்.ஒரு ஆட்டுக்குட்டி, தன் தாயைப் பிரிந்து காட்டில் வழிதெரியாமல் போய்விட்டது. கடும் களைப்பால் தாகம் மேலிட, ஒரு ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. அப்போது ஒரு ஓநாய், ""ஏய் ஆடே! ஏன் தண்ணீரை கலக்குகிறாய்?'' என்றது.
வம்புக்கார ஓநாய் தன்னை அடித்து தின்னவே வந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்ட ஆட்டுக்குட்டி, ""நீ அந்தப் பக்கமாக நின்று தானே தண்ணீர் குடிக்கிறாய்? நீ குடித்த தண்ணீரின் மிச்சம் தானே நான் நிற்கும் இடத்திற்கு வருகிறது? அப்படியிருக்க, நான் தண்ணீரைக் கலக்குவதாக சொல்கிறாயே?'' என்றது.
""அதெல்லாம் இல்லை. நீ எங்கு நின்றாலும், தண்ணீரைக் கலக்கத்தான் செய்கிறாய்,'' என்ற ஓநாய், ""ஐயையோ! இங்கே நான் சாப்பிட வளர்த்திருந்த புல்லைத் தின்று விட்டாயா?'' என்று கத்தியது.
""நீ புல் சாப்பிடமாட்டாயே. அது எங்கள் உணவல்லவா? நீ இறைச்சி சாப்பிடுபவன் ஆயிற்றே,'' என்று பயத்துடனும் பணிவுடனும் கேட்டது. உடன் ஓநாய், ""சரியாகச் சொன்னாய். இதோ பார்! உன்னை அடித்து சாப்பிடுகிறேன்,'' என்று பாயவும், ஒரு அம்பு ஓநாயின் மீது தைக்கவும் சரியாக இருந்தது.
அது அலறியபடியே உயிரை விட்டது. ஆட்டின் சொந்தக்காரன், ஆட்டைத் தேடி அங்கு வர, ஓநாய் அதன் மீது பாய்வதைப் பார்த்து, அம்பெய்து அதைக் கொன்று விட்டான். ஓநாயிடம் நெருங்கிச் சென்று வாக்குவாதம் செய்திருந்தால் ஆடு மடிந்திருக்கும். ஒதுங்கிப் போனதால் அது உயிர் தப்பியது.
""வாக்குவாதம் செய்ய வேண்டாம், அதனால், கேட்கிறவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய ஒரு பலனுமில்லை,'' என்ற பைபிள் வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....