போகப்போக தெரியும் உன் நிலைமை என்ன புரியும்!
ஒருஅழுக்குத்துணி பேசுகிறது.
""முன்னொரு நாளில் நான் வண்ண வண்ணமாய் சிங்காரமாய் இருந்தேன். அவர்களின் கைகளில் நான் அழகிய துணியாக இருந்தேன். அவர்கள் என்னைக் கையிலெடுத்து என் அழகை ரசித்தனர். தங்கள் படுக்கை அறையில் எனக்கு சொகுசு இடம் அளித்தனர். முக்கியத்துவமும் பிரசித்தமும் அனுபவித்தேன். ஒருநாள் என்னைக் கிழே தள்ளி வெளியே எறிந்து விட்டனர்.
என்ன தவறு நிகழ்ந்தது? என்னை நேசித்து போற்றிய மக்கள் இவர்கள் தானே! எப்படி இவர்கள் என்னை இப்படி நடத்தலாம்? அதே முகங்கள்! அதே மக்கள்.
அப்பொழுது தான் குனிந்து என்னைப் பார்க்கத் துவங்கினேன்.
ஆம்..என் தோற்றம் முன்பிருந்தது போல் இல்லை. இடைவிடா உழைப்பினால் நைந்து போயிருந்தேன். எனது சேவையினால் பிரகாசம் இழந்திருந்தேன். இப்போது நான் கவர்ச்சியாய் இல்லை. ஒத்துக்கொள்ள விநோதமாகத்தான் இருந்தது. மக்கள் இப்போது என்னை விரும்பவுமில்லை, நேசிக்கவுமில்லை.
கடைத்தெருவில் கிடைத்த புதிய துணிகளை அவர்கள் பயன்படுத்தத் துவங்கினர். இந்தப் புதியவர்கள் உற்சாகமாகவும் இருந்தனர். என்னைப் போலவே முடிவடைவார்கள் என்ற எண்ணம் அவர்கள் இதயத்தில் உதிக்கவில்லை. நாள் போகப் போகத்தானே தெரியும்!''
இந்த அழுக்குத்துணியின் புலம்பல் போல மக்களும் நம்மைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வயதாகி விட்டால் தள்ளி விடுவார்கள். ""இந்நாள் வரைக்கும் உலகத்தின் குப்பையைப் போலவும், எல்லாரும் துடைத்துப் போடுகிற அழுக்கைப் போலவுமானோம்,'' என்று பவுல் எழுதின போது, இப்படித்தான் உணர்ந்திருப்பார்.
தேவனோ நம்மை எப்போதும் உபயோகப்படுத்துகிறார். அழுக்குத்துணியை உதறித்தள்ளியது போல உன்னை இந்த உலகம் தள்ளி விட்டதா! திடன் கொள்ளுங்கள். இயேசுவையும் உலகம் அப்படித்தானே நடத்தியது. ஆனால், இயேசு உன்னை ஒரு போதும் கைவிடமாட்டார்.
அதற்கு நீ செய்ய வேண்டியது என்ன? தேவன் உனக்கு கட்டளையிட்டதைச் செய்யும்படியாக முன்னேறிச் செல். உன் உழைப்பு வீணாகாது. ஒவ்வொரு ஜெபமும், ஒவ்வொரு போராட்டமும், நீ கொடுத்த ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு கலசம் தண்ணீரும் ஒவ்வொன்றும் கணக்கிடப்பட்டு பதிவாகி விட்டது.
தேவன் உன்னை பாரப்படுத்தினவற்றை செய்து கொண்டே இரு! உன் ஓட்டத்தை முடிக்க அவரே உன்னைப் பெலப்படுத்துவார்.
தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து
கர்த்தரை துதித்து கொண்டே இருப்பேன்
பதிலளிநீக்கு