தலைவர்களே! இது உங்கள் கண்ணில் படாதா!
அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் ஜார்ஜ் வாஷிங்டன் ராணுவ தளபதியாக இருந்தார். ராணுவத்தில் சிறு பணியில் இருந்த ஒருவரின் கீழிருந்த சில வீரர்கள், அந்தக் கடும் குளிர் காலத்தில் தாங்கள் செல்லும் வழியில் ஒரு பாலம் அமைக்கும் படியாக ஒரு பெரிய கட்டையை உந்தித் தள்ளிக் கொண்டிருப்பதை ஜார்ஜ் கண்டார். அதைத் தள்ளுவதால் வீரர்கள் களைப்படைந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டார்.
அந்த வீரர்களின் கண்காணிப்பாளரான அந்த பணியாளனோ தன் கையில் கோலுடன் ஒரு பக்கமாய் அங்கு நின்று கொண்டு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். இந்த நிலையில் வீரர்களுக்கு உதவி தேவை என்பதை கண்டு கொண்ட ஜார்ஜ் வாஷிங்டன், தானே முன் சென்று அவர்களுடன் சேர்ந்து கொண்டு, பளுவான அந்த கட்டையைத் தள்ளினார். முடிவில் நல்லதொரு பாலமும் அமைக்கப்பட்டது.
அவர் தன் தொப்பியைச் சற்று தாழ்த்தி அணிந்திருந்தபடியால் பலரும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவர் விடை பெறும் போது அந்த சிறிய பணியாளனை நோக்கி, ""நம் வீரர்கள் இவ்வளவு கடினமாகி பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தபோது, நீர் அவர்களுக்குச் சற்று உதவி செய்திருக்கலாமே'' என்றார்.
அவனோ, ""என் அடையாள சின்னத்தை நீர் பார்க்கவில்லையா? நான் ஒரு ராணுவ உத்தியோகஸ்தன்'' என்றான்.
ஜார்ஜ் வாஷிங்டன் தன் தொப்பியைச் சற்று உயர்த்தி, ""நான் ராணுவத்தளபதி! இன்னொரு முறை இப்படி ஒரு பளுவான கட்டையை தள்ள வேண்டியது வரும் போது, தயவு செய்து என்னைக் கூப்பிடுங்கள்,'' என்று கூறி விட்டு நகர்ந்தார். அந்த பணியாளன் அதிர்ச்சி அடைந்தான். தன்னைத் தாழ்த்தி பணிவிடை செய்த ஜார்ஜ் வாஷிங்டன் பின்னாளில் அமெரிக்காவின் ஜனாதிபதியானார். காரணம் அவருக்குள் கிறிஸ்துவின் சிந்தை இருந்தது.
கிறிஸ்துவின் சிந்தை என்பது என்ன?
""அவர்(இயேசு கிறிஸ்து) தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே பொறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலனார். அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு மரணபரிந்தயம் அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார்.(பிலி.2: 5-8)
இப்படிப்பட்ட தாழ்மையின் சிந்தை நமக்கு அவசியம்.
தேவன் நமக்கு தந்திருக்கிற பொறுப்புக்களை நினைத்து பெருமைப்படாமல் பாக்கியமாக கருதுங்கள். தேவனே எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறவர் என்பதை உணர்ந்து துன்மார்க்கரிடமும் தேவ மனுஷன் தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கிற அதிகாரங்களை தவறாய் பயன்படுத்தக் கூடாது. இயேசுகிறிஸ்து ராஜாதி ராஜாவாக இருந்தும் சாதாரண மனிதர்களான நம்முடைய கால்களைக் கழுவினார். இது தான் தலைவனாய் இருக்கிறவருடைய குணாதிசயம். ""தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்'' என்பதை உணர்ந்து கொள்வோம்.
கிருஸ்தவ பாஸ்டர்ஸ் படிக்கவேண்டியது
பதிலளிநீக்கு