மன்னிக்க மாட்டாய்! உன் மனமிரங்கி..!
நீங்கள் ஒருவரை மன்னிக்காத பொழுது இரண்டு நபருக்கு இங்கு தீங்கு செய்கிறீர்கள். ஒன்று உங்கள் எதிராளி. இன்னொருவர் நீங்கள் தான்.
மன்னியாமை குறித்து இயேசு ஒரு உவமைக்கதை சொன்னார்.
ஒரு பணியாளன், தனது முதலாளியிடம் பத்தாயிரம் தாலந்து கடனாக வாங்குகிறார். ஒருமுறை அவனை அழைத்து, வாங்கிய கடனைக் கொடுத்து தீர்க்கும் படி கட்டளையிடுகிறார். பணியாளனோ, அது விஷயத்தில் பொறுமையாய் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறான்.
அதைக் கேட்ட அவனுடைய முதலாளி, அவன் மீது மனமிரங்கி, அவனை மன்னித்து கடனை ரத்து செய்து விடுதலை பண்ணுகிறார். இந்த பணியாளனுக்கு ஒரு பணியாளன் இருந்தான். அவன் தன் முதலாளியிடம், நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தான். அதைத் திருப்பித்தரக் கேட்டான். அவன் தன்னால் தற்போது தர இயலாது என சொல்லவே, அவனது தொண்டையை நெரித்து காவலில் இட்டான்.
இதைக் கேள்விப்பட்ட முதலாளி, தன் பணியாளனின் மன்னிப்பை ரத்து செய்து, ""பொல்லா ஊழியக்காரனே! என்னை வேண்டிக் கொண்ட படியினால் நீ பட்ட கடனை முழுதையும் மன்னித்து விட்டேன். நான் உனக்கு இரங்கினது போல் நீயும் உன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமா!'' என்று சொல்லி அவன் மீது கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்கு கொடுத்து தீர்க்குமளவும்- உபாதிக்கிறவர்களிடத்தில் (தண்டனை கொடுப்பவர்களிடம்) அவனை ஒப்புக் கொடுத்தான்.
ஆகையால், நீங்கள் யாரையாவது மன்னியாதிருந்தால், உங்களுடைய மன்னிப்பு ரத்து ஆகும் வாய்ப்பு உள்ளது... ஆம்.... ஆமை குளத்தைக் கெடுக்கும். மன்னியாமை இருதயத்தைக் கெடுக்கும்.
பைபிள் சொல்வதைக் கேளுங்கள்.
* நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமல் போனால் என் பரமபிதாவும், உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.(மத்தேயு 6:37).
* மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். அப்போது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள். அத்துடன் விடுதலைப் பண்ணப்படுவீர்கள்.(லூக்கா 6:37)
பாபு.ஜெ.பீட்டர்