அறிவாளி தான் சாதனையாளனா?
வாழ்வில் முன்னேறிய அனைவரும் பெரும் அறிவாளிகளாக இருப்பார்கள் என்று எண்ணத் தேவையில்லை. இருக்கிற அறிவைக் கொண்டே முன்னேறி விடலாம்.
இயேசுநாதர் சொன்ன ஒரு கதையைக் கேளுங்க!
பணக்காரன் ஒருவனுக்கு தன் செல்வத்தை மேலும் பெருக்க ஆசை ஏற்பட்டது. வெளிநாடு சென்றால் விரைவில் நிறைய செல்வம் சேர்க்க முடியும் என கருதினான்.
அவனிடத்தில் மூன்று ஊழியர்கள் இருந்தார்கள். தான் புறப்படுவதற்கு முன்னதாக அந்த மூன்று பேரையும் அவன் அழைத்தான். அவர்களுக்கு சேரவேண்டிய சம்பளத்துடன் அன்பளிப்பாக பெருந்தொகையைக் கொடுத்து தான் திரும்ப வந்தவுடன் மறுபடியும் அவர்களையே வேலைக்கு எடுத்துக் கொள்வதாகவும் வாக்களித்தான்.
ஊழியர்களிடம் தனக்குள்ள தொடர்பு அறுந்து போகக்கூடாது என்பதற்காக அவர்களிடம் கடனாக ஒரு தொகையை கொடுக்க தீர்மானித்தான்.
தன்னிடம் ஊழியம் செய்கின்ற அந்த மூன்று பேரும் ஒரே மாதிரியான திறமை படைத்தவர்கள் அல்லர் என்பது செல்வந்தனுக்குத் தெரியும்.
ஆகவே, அவரவர் திறமைக்கு ஏற்ற வகையில் ஒருவனிடம் ஐந்து தாலந்தும், அடுத்தவனிடம் இரண்டு தாலந்தும், மூன்றாமவனிடம் ஒரு தாலந்தும் கொடுத்தான். ஒரு தாலந்து என்பது ஏறத்தாழ ஆயிரம் ரூபாய்க்கு சமம். பிறகு அவன் வெளிநாட்டிற்கு சென்று விட்டான். சில ஆண்டுகள் கழிந்து செல்வத்தோடு திரும்பிவந்தான்.
தன் எஜமானனிடம் ஐந்து தாலந்துகளைப் பெற்ற ஊழியன், வியாபாரம் செய்தான். நல்ல லாபம் கிடைத்தது. இரண்டு தாலந்துகளைப் பெற்ற ஊழியனும் அதை நல்வழிகளில் பயன்படுத்தி மேலும் இரண்டு தாலந்துகளைச் சம்பாதித்துவிட்டான்.
ஆனால், ஒரு தாலந்தைப் பெற்ற ஊழியன் அந்தப் பணத்தை நிலத்தில் புதைத்துவிட்டான். வெளிநாட்டிலிருந்து திரும்பிய செல்வந்தன் தன் மூன்று ஊழியர்களையும் அழைத்து தான் கொடுத்துவிட்டுப்போன பணத்திற்கு கணக்குக் கேட்டான். ஐந்து தாலந்துகளைப் பெற்றவன் பத்து தாலந்துகளை கொண்டு வந்து தன் எஜமானனிடம் கொடுத்தான். எஜமானன் மகிழ்ந்தான். தன் சொத்துக்களை நிர்வாகிக்கும் உயர் அதிகாரியாக நியமித்தான். இரண்டு தாலந்துகளை வாங்கியவன், நான்கு தாலந்துகளாக தன் எஜமானனிடம் ஒப்படைத்தான். எஜமானன் அவனுக்கு நல்ல பதவி கொடுத்தான். ஒரு தாலந்தை வாங்கிய ஊழியன் மிகப்பத்திரமாய்ப் புதைத்து வைத்திருந்த தாலந்தைப் பூமியைத்தோண்டி எடுத்து வந்தான்.
அவன் தன் எஜமானனிடம், ""நீர் விதைக்காத இடத்தில் அறுவடை செய்ய முயலும், வெறும் கையை முழம் போடும், கடின நெஞ்சமுள்ள மனிதன் என்பதை நான் அறிவேன். ஆகையால், நான் பயந்து போய் நமக்கெதற்கு வீண் வம்பு என்று கருதி நீர் கொடுத்த தாலந்தை நிலத்தில் இதுநாள் வரை புதைத்து வைத்திருந்தேன். அதை அப்படியே கொண்டு வந்துவிட்டேன். இதோ உம்முடையதை வாங்கிக் கொள்ளும்,'' என்று கூறினான்.
செல்வந்தன் இதைக் கேட்டு கோபமடைந்தான். அந்த ஊழியனை தண்டனைச் சாலையில் தள்ள உத்தரவிட்டான். உழைக்காமல் சோம்பேறியாக காலம் கழித்த அவன், அங்கேயாவது திருந்தட்டும் என்கிற நல்ல நோக்கத்துடன் செல்வந்தன் இவ்வாறு செய்தான்.
இந்தக்கதையில் செல்வந்தன் என்பது இறைவனையும், ஊழியர்கள் என்பது மக்களையும் குறிக்கிறது.
இறைவன் மனிதர் அனைவருக்குமே அவரவர் அறிவு, ஆற்றல், சூழ்நிலை ஆகியவைகளுக்கு தக்க ஏதாவது ஒரு கலையில் "திறமை' எனப்படும் தாலந்தைக் கொடுத்திருக்கிறார். ஒரு திறமையுமே இல்லாமல் எந்த மனிதனும் படைக்கப்படுவதில்லை.
மிகுதியோ, குறைவோ கொடுக்கப்பட்ட தாலந்துகளைப் பயன்படுத்திக் கொள்வதும், பயன்படுத்திக் கொள்ளாததும் மனிதர்கள் கையில்தான் உள்ளது. "இறைக்கிற ஊற்றே சுரக்கும்' என்பதைப் போலப் பயன்படுத்தப்படுகிற திறமைகளே வளரும்; பெருகும். இறைவனால் அருளப்பட்ட தாலந்துகளை ஒழுங்காகப் பயன்படுத்தித் தனக்கும் பிறருக்கும் அதை நல்வழியில் உபயோகப்படுத்துவோருக்கு இறைவனுடைய கருணை மேன்மேலும் திறமைகளாகிய தாலந்துகளை வழங்கும். அவ்வாறின்றி, இறைவன் கொடுத்த அறிவை, கலைகளை, திறமைகளைப் பயன்படுத்தாமல், சோம்பலுடன் வாழ்நாளை வீணாகக் கழிப்பவர்கள் ஒன்றுக்கும் உதவாமல் போவார்கள்.
கர்த்தர் ஆசீர்வதிப்பாராக !!!!!!!!!!!!
பதிலளிநீக்குthanks
நீக்கு