Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 30 மார்ச், 2015

மன்னிக்க மாட்டாய்! உன் மனமிரங்கி..!



நீங்கள் ஒருவரை மன்னிக்காத பொழுது இரண்டு நபருக்கு இங்கு தீங்கு செய்கிறீர்கள். ஒன்று உங்கள் எதிராளி. இன்னொருவர் நீங்கள் தான்.
மன்னியாமை குறித்து இயேசு ஒரு உவமைக்கதை சொன்னார்.
ஒரு பணியாளன், தனது முதலாளியிடம் பத்தாயிரம் தாலந்து கடனாக வாங்குகிறார். ஒருமுறை அவனை அழைத்து, வாங்கிய கடனைக் கொடுத்து தீர்க்கும் படி கட்டளையிடுகிறார். பணியாளனோ, அது விஷயத்தில் பொறுமையாய் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறான்.

அதைக் கேட்ட அவனுடைய முதலாளி, அவன் மீது மனமிரங்கி, அவனை மன்னித்து கடனை ரத்து செய்து விடுதலை பண்ணுகிறார். இந்த பணியாளனுக்கு ஒரு பணியாளன் இருந்தான். அவன் தன் முதலாளியிடம், நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தான். அதைத் திருப்பித்தரக் கேட்டான். அவன் தன்னால் தற்போது தர இயலாது என சொல்லவே, அவனது தொண்டையை நெரித்து காவலில் இட்டான்.

இதைக் கேள்விப்பட்ட முதலாளி, தன் பணியாளனின் மன்னிப்பை ரத்து செய்து, ""பொல்லா ஊழியக்காரனே! என்னை வேண்டிக் கொண்ட படியினால் நீ பட்ட கடனை முழுதையும் மன்னித்து விட்டேன். நான் உனக்கு இரங்கினது போல் நீயும் உன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமா!'' என்று சொல்லி அவன் மீது கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்கு கொடுத்து தீர்க்குமளவும்- உபாதிக்கிறவர்களிடத்தில் (தண்டனை கொடுப்பவர்களிடம்) அவனை ஒப்புக் கொடுத்தான்.

ஆகையால், நீங்கள் யாரையாவது மன்னியாதிருந்தால், உங்களுடைய மன்னிப்பு ரத்து ஆகும் வாய்ப்பு உள்ளது... ஆம்.... ஆமை குளத்தைக் கெடுக்கும். மன்னியாமை இருதயத்தைக் கெடுக்கும்.

பைபிள் சொல்வதைக் கேளுங்கள்.
* நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமல் போனால் என் பரமபிதாவும், உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.(மத்தேயு 6:37).
* மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். அப்போது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள். அத்துடன் விடுதலைப் பண்ணப்படுவீர்கள்.(லூக்கா 6:37)
பாபு.ஜெ.பீட்டர்

இறை அலைகள் -Irai Alaikal -Vol-1 (Oppuravu Paadalhal)



Oppuravu Paadalhal Vol-1
Fr.S.Agilan SDB
Don Bosco Mission
St.Antony's Church
Vilathikulam
Tuticorin


Appa Un Pillai Appa Naan Appa Nee Yesu Yesu Irakkathin Ethanai Natkal Yen Yesuvae En Pizhaiyellam Kannivu Kaatum Thanthai Thanthayin

போகப்போக தெரியும் உன் நிலைமை என்ன புரியும்!



ஒருஅழுக்குத்துணி பேசுகிறது.
""முன்னொரு நாளில் நான் வண்ண வண்ணமாய் சிங்காரமாய் இருந்தேன். அவர்களின் கைகளில் நான் அழகிய துணியாக இருந்தேன். அவர்கள் என்னைக் கையிலெடுத்து என் அழகை ரசித்தனர். தங்கள் படுக்கை அறையில் எனக்கு சொகுசு இடம் அளித்தனர். முக்கியத்துவமும் பிரசித்தமும் அனுபவித்தேன். ஒருநாள் என்னைக் கிழே தள்ளி வெளியே எறிந்து விட்டனர்.
என்ன தவறு நிகழ்ந்தது? என்னை நேசித்து போற்றிய மக்கள் இவர்கள் தானே! எப்படி இவர்கள் என்னை இப்படி நடத்தலாம்? அதே முகங்கள்! அதே மக்கள்.
அப்பொழுது தான் குனிந்து என்னைப் பார்க்கத் துவங்கினேன்.

ஆம்..என் தோற்றம் முன்பிருந்தது போல் இல்லை. இடைவிடா உழைப்பினால் நைந்து போயிருந்தேன். எனது சேவையினால் பிரகாசம் இழந்திருந்தேன். இப்போது நான் கவர்ச்சியாய் இல்லை. ஒத்துக்கொள்ள விநோதமாகத்தான் இருந்தது. மக்கள் இப்போது என்னை விரும்பவுமில்லை, நேசிக்கவுமில்லை.

கடைத்தெருவில் கிடைத்த புதிய துணிகளை அவர்கள் பயன்படுத்தத் துவங்கினர். இந்தப் புதியவர்கள் உற்சாகமாகவும் இருந்தனர். என்னைப் போலவே முடிவடைவார்கள் என்ற எண்ணம் அவர்கள் இதயத்தில் உதிக்கவில்லை. நாள் போகப் போகத்தானே தெரியும்!''

இந்த அழுக்குத்துணியின் புலம்பல் போல மக்களும் நம்மைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வயதாகி விட்டால் தள்ளி விடுவார்கள். ""இந்நாள் வரைக்கும் உலகத்தின் குப்பையைப் போலவும், எல்லாரும் துடைத்துப் போடுகிற அழுக்கைப் போலவுமானோம்,'' என்று பவுல் எழுதின போது, இப்படித்தான் உணர்ந்திருப்பார்.

தேவனோ நம்மை எப்போதும் உபயோகப்படுத்துகிறார். அழுக்குத்துணியை உதறித்தள்ளியது போல உன்னை இந்த உலகம் தள்ளி விட்டதா! திடன் கொள்ளுங்கள். இயேசுவையும் உலகம் அப்படித்தானே நடத்தியது. ஆனால், இயேசு உன்னை ஒரு போதும் கைவிடமாட்டார்.

அதற்கு நீ செய்ய வேண்டியது என்ன? தேவன் உனக்கு கட்டளையிட்டதைச் செய்யும்படியாக முன்னேறிச் செல். உன் உழைப்பு வீணாகாது. ஒவ்வொரு ஜெபமும், ஒவ்வொரு போராட்டமும், நீ கொடுத்த ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு கலசம் தண்ணீரும் ஒவ்வொன்றும் கணக்கிடப்பட்டு பதிவாகி விட்டது.
தேவன் உன்னை பாரப்படுத்தினவற்றை செய்து கொண்டே இரு! உன் ஓட்டத்தை முடிக்க அவரே உன்னைப் பெலப்படுத்துவார்.
தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து

ஞாயிறு, 29 மார்ச், 2015

வம்பர்களிடம் நமக்கென்ன வேலை!



வம்புக்காரர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், விலகிச் செல்வதே நல்லது என்கிறது பைபிள்.ஒரு ஆட்டுக்குட்டி, தன் தாயைப் பிரிந்து காட்டில் வழிதெரியாமல் போய்விட்டது. கடும் களைப்பால் தாகம் மேலிட, ஒரு ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. அப்போது ஒரு ஓநாய், ""ஏய் ஆடே! ஏன் தண்ணீரை கலக்குகிறாய்?'' என்றது.

வம்புக்கார ஓநாய் தன்னை அடித்து தின்னவே வந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்ட ஆட்டுக்குட்டி, ""நீ அந்தப் பக்கமாக நின்று தானே தண்ணீர் குடிக்கிறாய்? நீ குடித்த தண்ணீரின் மிச்சம் தானே நான் நிற்கும் இடத்திற்கு வருகிறது? அப்படியிருக்க, நான் தண்ணீரைக் கலக்குவதாக சொல்கிறாயே?'' என்றது.

""அதெல்லாம் இல்லை. நீ எங்கு நின்றாலும், தண்ணீரைக் கலக்கத்தான் செய்கிறாய்,'' என்ற ஓநாய், ""ஐயையோ! இங்கே நான் சாப்பிட வளர்த்திருந்த புல்லைத் தின்று விட்டாயா?'' என்று கத்தியது.

""நீ புல் சாப்பிடமாட்டாயே. அது எங்கள் உணவல்லவா? நீ இறைச்சி சாப்பிடுபவன் ஆயிற்றே,'' என்று பயத்துடனும் பணிவுடனும் கேட்டது. உடன் ஓநாய், ""சரியாகச் சொன்னாய். இதோ பார்! உன்னை அடித்து சாப்பிடுகிறேன்,'' என்று பாயவும், ஒரு அம்பு ஓநாயின் மீது தைக்கவும் சரியாக இருந்தது. 

அது அலறியபடியே உயிரை விட்டது. ஆட்டின் சொந்தக்காரன், ஆட்டைத் தேடி அங்கு வர, ஓநாய் அதன் மீது பாய்வதைப் பார்த்து, அம்பெய்து அதைக் கொன்று விட்டான். ஓநாயிடம் நெருங்கிச் சென்று வாக்குவாதம் செய்திருந்தால் ஆடு மடிந்திருக்கும். ஒதுங்கிப் போனதால் அது உயிர் தப்பியது.

""வாக்குவாதம் செய்ய வேண்டாம், அதனால், கேட்கிறவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய ஒரு பலனுமில்லை,'' என்ற பைபிள் வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.

செவ்வாய், 24 மார்ச், 2015

மறக்கக்கூடாத வசனம்!


ஒரு ஆற்றில் மழை காரணமாக கடும் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது.
ஆற்றங்கரையோரமாக நடந்து வந்த ஒரு சிறுமி, தண்ணீரில் தவறி விழுந்து விட்டாள். ஆற்றில் வேகமாக அடித்துச் செல்லப்பட்ட அவளை, கரையில் நின்ற மைக்கேல் என்பவர் பார்த்தார். சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்தார். வெள்ளம் அவரையும் இழுத்துச் சென்றது. எப்படியோ சிறுமியை தட்டுத்தடுமாறி பிடித்தார். ஆனாலும், கரைக்கு வர முடியாமல் அவரும் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தார்.

அந்நேரத்தில் பாலம் ஒன்றில், அவர்கள் மோதி நின்றனர். பாலமும் வெள்ளத்தில் சேதமடைந்திருந்தது. ஆனால் நீட்டிக் கொண்டிருந்த கம்பி ஒன்றை, மைக்கேல் பற்றிக்கொண்டார். கரையில் நின்ற மற்றவர்கள் கலங்கி நின்றார்கள். மீட்புப் படையினருக்கு தகவல் சென்றது. அவர்கள் வேகமாக வந்து இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர். கரைக்கு வந்த பிறகு, மக்கள் மைக்கேலைப் பாராட்டினார்.

அவரைப்பற்றி விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் என்ன தெரியுமா?
"எனக்கு நீச்சல் தெரியாது!' என்பதுதான். ஆபத்தான நேரத்தில் அதை எதிர்த்துப் போராட கற்றுக்கொள்ள வேண்டும். அந்த ஆபத்தைச் சமாளிக்கத் தெரியாது என தயங்கி நிற்கக் கூடாது.

""நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள்; அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடே கூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை,'' என்கிறது பைபிள். இந்த வசனத்தை வாழ்நாள் முழுவதும் மறக்காதீர்கள்.

திங்கள், 23 மார்ச், 2015

தலைவர்களே! இது உங்கள் கண்ணில் படாதா!

  

அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் ஜார்ஜ் வாஷிங்டன் ராணுவ தளபதியாக இருந்தார். ராணுவத்தில் சிறு பணியில் இருந்த ஒருவரின் கீழிருந்த சில வீரர்கள், அந்தக் கடும் குளிர் காலத்தில் தாங்கள் செல்லும் வழியில் ஒரு பாலம் அமைக்கும் படியாக ஒரு பெரிய கட்டையை உந்தித் தள்ளிக் கொண்டிருப்பதை ஜார்ஜ் கண்டார். அதைத் தள்ளுவதால் வீரர்கள் களைப்படைந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டார். 

அந்த வீரர்களின் கண்காணிப்பாளரான அந்த பணியாளனோ தன் கையில் கோலுடன் ஒரு பக்கமாய் அங்கு நின்று கொண்டு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தான். இந்த நிலையில் வீரர்களுக்கு உதவி தேவை என்பதை கண்டு கொண்ட ஜார்ஜ் வாஷிங்டன், தானே முன் சென்று அவர்களுடன் சேர்ந்து கொண்டு, பளுவான அந்த கட்டையைத் தள்ளினார். முடிவில் நல்லதொரு பாலமும் அமைக்கப்பட்டது. 

அவர் தன் தொப்பியைச் சற்று தாழ்த்தி அணிந்திருந்தபடியால் பலரும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவர் விடை பெறும் போது அந்த சிறிய பணியாளனை நோக்கி, ""நம் வீரர்கள் இவ்வளவு கடினமாகி பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தபோது, நீர் அவர்களுக்குச் சற்று உதவி செய்திருக்கலாமே'' என்றார்.
அவனோ, ""என் அடையாள சின்னத்தை நீர் பார்க்கவில்லையா? நான் ஒரு ராணுவ உத்தியோகஸ்தன்'' என்றான்.
ஜார்ஜ் வாஷிங்டன் தன் தொப்பியைச் சற்று உயர்த்தி, ""நான் ராணுவத்தளபதி! இன்னொரு முறை இப்படி ஒரு பளுவான கட்டையை தள்ள வேண்டியது வரும் போது, தயவு செய்து என்னைக் கூப்பிடுங்கள்,'' என்று கூறி விட்டு நகர்ந்தார். அந்த பணியாளன் அதிர்ச்சி அடைந்தான். தன்னைத் தாழ்த்தி பணிவிடை செய்த ஜார்ஜ் வாஷிங்டன் பின்னாளில் அமெரிக்காவின் ஜனாதிபதியானார். காரணம் அவருக்குள் கிறிஸ்துவின் சிந்தை இருந்தது. 
கிறிஸ்துவின் சிந்தை என்பது என்ன?

""அவர்(இயேசு கிறிஸ்து) தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே பொறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலனார். அவர் மனுஷ ரூபமாய்க் காணப்பட்டு மரணபரிந்தயம் அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத் தாமே தாழ்த்தினார்.(பிலி.2: 5-8)
இப்படிப்பட்ட தாழ்மையின் சிந்தை நமக்கு அவசியம். 

தேவன் நமக்கு தந்திருக்கிற பொறுப்புக்களை நினைத்து பெருமைப்படாமல் பாக்கியமாக கருதுங்கள். தேவனே எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறவர் என்பதை உணர்ந்து துன்மார்க்கரிடமும் தேவ மனுஷன் தாழ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கிற அதிகாரங்களை தவறாய் பயன்படுத்தக் கூடாது. இயேசுகிறிஸ்து ராஜாதி ராஜாவாக இருந்தும் சாதாரண மனிதர்களான நம்முடைய கால்களைக் கழுவினார். இது தான் தலைவனாய் இருக்கிறவருடைய குணாதிசயம். ""தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்'' என்பதை உணர்ந்து கொள்வோம். 

You may like also

Categories

Popular