Tamil christian song ,video songs ,message ,and more

சனி, 4 ஏப்ரல், 2015

கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்



உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
1 பேதுரு 1: 18-19

ஒரு நாள் ஒரு போதகர் ஒரு பறவை கூண்டை கையில் எடுத்து கொண்டு வந்து, பிரசங்க பீடத்தண்டை வைத்தார். சபையார் எல்லாரும் எதற்கு அதை அங்கு கொண்டு வந்தார் என்று அவரையே நோக்கி கொண்டிருந்தார்கள். போதகர் பேச ஆரம்பித்தார். அவர் நேற்றைய தினம் வெளியே நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் ஒரு பறவை கூண்டையும் அதில் மூன்று பறவைகளையும் பிடித்து கொண்டு நடந்து கொண்டிருப்பதை கண்டார். அதை பின்வருமாறு கூற ஆரம்பித்தார்:

'அந்த சிறுவனிடம், 'மகனே, நீ என்ன கையில் வைத்திருக்கிறாய்?' என்று கேட்டேன், அதற்கு அந்த சிறுவன், 'மூன்று வயதான பறவைகளை இந்த கூண்டில் வைத்திருக்கிறேன்' என்றான். அதற்கு நான் 'இதை கொண்டு பொய் என்ன செய்ய போகிறாய்?' என்று கேட்டேன். அதற்கு அவன், 'அவைகளை கொண்டு நான் என் பொழுதை செலவழிப்பேன், அவைகளின் இறக்கையை பிடுங்குவேன், ஒன்றோடொன்று சண்டையிட வைப்பேன்' என்றான். அதற்கு நான், 'சரி எத்தனை நேரம் அதை செய்து கொண்டிருப்பாய், உனக்கு போர் அடித்த பின் அதை என்ன செய்வாய்?' என்று கேட்டதற்கு அவன், 'எனக்கு சில பூனைகளை தெரியும், அவைகளிடம் கொண்டு போய் விடுவேன், அவைகள் இவைகளை சாப்பிட்டு விடும்' என்றான். அப்போது நான், 'மகனே இதை நான் வாங்கி கொள்ள வேண்டுமானால், உனக்கு எவ்வளவு காசு தர வேண்டும்'

என்று கேட்டேன், அதற்கு அவன், 'சே, இந்த பழைய, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத பறவைகளை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்' என்று கேட்டான், அதற்கு நான் 'நீ எவ்வளவு என்று சொல்' என்று கேட்டேன். அவன் '50 ரூபாய்கள்' என்றவுடன், நான் கொடுத்து வாங்கி வந்து, இன்று வெளியே காணப்படும் மரத்தில் விடுதலையாக பறக்க விட்டேன், அவை இருந்த கூண்டு தான் இது' என்று விளக்கினார்.

பின்னர், பின்வரும் காரியத்தையும் கூற ஆரம்பித்தார்: ஒரு நாள் இயேசு கிறிஸ்துவும் பிசாசும் பேச ஆரம்பித்தார்கள். பிசாசு அப்போது தான் உலகத்திலிருந்து வந்திருந்தான். மிகவும் தெம்பொடும் பெருமையோடும் அவன் இருந்தான், இயேசுகிறிஸ்துவை பார்த்தவுடன், அவன் 'ஐயா, பார்த்தீர்களா, என்னிடம் எத்தனை பேர் மாட்டி கொண்டிருக்கிறார்கள் என்பதை? நான் ஒரு சிறு பொறியைதான் வைத்தேன், அதிலே மாட்டி கொண்டவர்கள் எத்தனை பேர் பாரும்' என்று பெருமையோடு பேசினான். அதற்கு இயேசுகிறிஸ்து, 'நீ அவர்களை வைத்து என்ன செய்ய போகிறாய்?' என்று கேட்டார். 'ஹா! என்ன செய்ய போகிறேன் தெரியுமா? அவர்களுக்கு திருமணம் செய்ய போதித்து, அவர்களை விவாகரத்து செய்ய வைப்பேன்,

ஒருவரையொருவர் பட்சித்து, சண்டையிட்டு வாழ்வை சீர்குலைப்பேன், அவர்களை எல்லாவித பாவங்களிலும் விழ வைத்;து, கடைசியில் எரிகிற அக்கினி கடலில் என்னோடு கூட எப்போதும் இருக்க வைக்க போகிறேன்' என்று சொல்லி பயங்கரமாக சிரித்தான். அப்போது இயேசுகிறிஸ்து 'எத்தனை கிரயம் கொடுத்தால் எனக்கு கொடுக்க விரும்புவாய்?' என்று கேட்க, அவன், 'இந்த ஜனம் மிகவும் மோசமானவர்கள், நல்லவர்களே இல்லை, உம்மை ஏற்று கொள்ளவே மாட்டார்கள், உம்மை அடிப்பார்கள், உம்மை துன்புறுத்துவார்கள், உம்மை சிலுவையில் அறைவார்கள், பாடுகளை சகிக்க வைப்பார்கள், இவர்களையா நீர் கிரயம் கொடுத்து வாங்க போகிறீர்?' என்று கேட்டான், அதற்கு இயேசு, 'நீ விலைக்கிரயம் மாத்திரம் சொல்' என்று உறுதியுடன் கேட்க அவன், 'உம்முடைய எல்லா கண்ணீரும், எல்லா இரத்தமும்' என்றான்.

இயேசுகிறிஸ்து அதை கிரயமாக அவனுக்கு கொடுத்து, நம்மை அவனிடமிருந்து மீட்டார்.
'உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே என்று வசனம் நமக்கு போதிக்கிறது. கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே' -(1 கொரிந்தியர் 6:20) என்று வேதம் நமக்கு சொல்கிறது. எந்த கிரயம்? இயேசுகிறிஸ்துவின் மாசில்லாத குற்றமில்லாத, விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டிருக்கிறோம்.
இயேசுகிறிஸ்து நம்மை விலைக்கிரயம் கொடுத்து வாங்கி விட்டபடியால், நாம் பிசாசிற்கு இனி அடிமைகளில்லை. அவன் நம்மை அவன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்க முடியாது. நம்மை பாவத்திற்கு இழுக்க முடியாது. அப்படி அவன் இழுத்து நம்மை பாவத்திற்கு தூண்டும்போது நாம் விழுந்து போவோமானால், நம்மை மீட்டு கொண்ட கிறிஸ்துவுக்கு நாம் எப்படி நன்றியோடு இருக்க முடியும்? நாம் எப்படி வருங் கோபத்திற்கு தப்பித்து கொள்ள முடியும்? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள் நீதிமான்களாக்கப்பட்டீர்கள்

(1கொரிந்தியர் 6:11). அப்படி பரிசுத்தமாக்கப்பட்ட உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் (வசனம் 19-20). அந்தப்படி நாம் வாழ்ந்து, பிசாசிற்கு எதிர்த்து நின்று கர்த்தருக்கு மகிமையாய் ஜீவிக்க தேவன் தாமே ஒவ்வொருவரையும் பலப்படுத்துவாராக!

விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வரும் எங்கள் நல்ல தகப்பனே, இயேசுகிறிஸ்துவின் மாசற்ற விலையேறப்பெற்ற திரு இரத்தத்தினால் எங்களை உமக்கென்று மீட்டு கொண்டீரே உமக்கு நன்றி. அந்த இரத்தத்தினால் நாங்கள் சாத்தானை ஜெயிக்கவும், வெற்றி மேல் வெற்றி எடுக்கவும், நீர் பாராட்டுகிற கிருபைக்காக நன்றி. பிசாசானவன் எங்களை பாவத்திற்கு அடிமைகளாக்காதபடி, எங்களை பெலவானாய் மாற்றுகிற கிறிஸ்துவின் இரத்தத்திற்காக நன்றி. சோர்ந்து போய், பிசாசின் தந்திரங்களுக்கு இடம் கொடுத்து, பாவத்தில் விழுந்து போன ஒவ்வொரு விசுவாசியையும் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால், பிசாசின் மேல் வெற்றி எடுக்கிறவர்களாகவும் சாத்தானை ஜெயிக்கிறவர்களாகவும் மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular