எதற்கும் ஆஞ்சாத தாய்

ஒருநாள், அவரை ஓர் அதிகாரியின் முன் நிறுத்தினார்கள். போதகரால் நிற்க முடியவில்லை. கண்கள் இருண்டு தள்ளாடினார். திடீரென்று அவரது பார்வை அந்த அறையின் மூலையில் திரும்பியது. அங்கே உடல் தெரியும்படி கந்தல் துணியை அணிந்து மெலிந்து போன ஒரு பெண்மணி நடுங்கிக் கொண்டிருந்தாள்.
போதகர் கூர்ந்து பார்த்தார். அது அவரது தாய். அவரையும் சித்திரவதை செய்வதற்காக இழுத்து வந்திருந்தனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல வேதனையுற்றவராக செங் துடித்தார்.
தாயின் தலைமுடி நரைத்து வெண்மையாய் இருந்தது. கண்கள் உள்ளே சொருகி ஆழத்திலிருந்தன. எலும்புக்கூடாக இருந்த அவளது முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவளை அடித்ததால் ஏற்பட்ட காயங்கள் அவை.
அமைதியைக் கலைத்து, அந்த உயர்தர அதிகாரி பேசினார். ""கிறிஸ்தவர்களுக்கு பத்து கற்பனைகள் உண்டே! அவைகள் என்ன என்ன என்பதை எனக்கு சொல்ல முடியமா?''
போதகர் பேசும் நிலைமையில் இல்லை என்றாலும் கூட, அந்த அதிகாரியிடம் தேவனது கற்பனைகளைச் சொல்ல வேண்டும் என்பதற்காக, பலத்தை வரவழைத்துக் கொண்டு ஒவ்வொரு கற்பனையாக சொல்லிக் கொண்டு வந்தார். ""உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக'' என்ற கற்பனை வந்ததும் அந்த அதிகாரி நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார்.
""போதகரே, உமது தாயை கனம் பண்ணுவதற்கு இதோ ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். உம்மோடு உள்ள மற்ற கிறிஸ்தவ சகோதரர்கள் பெயரைச் சொல்லுவீரானால் உம்மையும் உமது தாயையும், விடுதலை செய்கிறோம். நீர் உண்மையிலேயே தேவனுடைய கற்பனைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமுடையவரானால், உமது தாயைக் கனம் பண்ண வேண்டும் என்று விரும்பினால், கிறிஸ்தவ விசுவாசிகளின் பெயர்களைச் சொல்லும்'' என்றார்.
இக்கட்டான சூழ்நிலையில், போதகரால் எந்த தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. தன் தாயின் பக்கம் திரும்பினார். ""அம்மா நான் என்ன செய்யட்டும்,'' என்றார்.
அந்தத் தாயின் பதிலென்ன தெரியுமா?
""மகனே சிறுவயதிலிருந்தே உனக்கு இயேசுகிறிஸ்துவின் அன்பைப் பற்றியும், பரிசுத்தமான சபையைக் குறித்தும் நான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். எனது பாடுகள் குறித்து நீ கலங்காதே, உன்னை இரட்சிக்க தனது ஜீவனைக் கொடுத்த இரட்சகருக்கு உண்மையுள்ளவனாயிரு, காட்டிக் கொடுக்காதே; நீ என்னுடைய மகனல்ல; நான் உன் தாயல்ல'' என்றாள்.
தன்னைக் கொடுமை செய்தவர்களைக் கண்டு அந்தத் தாய் அஞ்சவில்லை. ""கிறிஸ்துவின் அன்பை விட்டுப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?'' (ரோம.8:36) என்று அவள் நினைத்த வேளையில் அவளது கண்களில் ஓர் பிரகாசம் பளிச்சிட்டது.
அவளைத் "தரதர'' என்று இழுத்துச் சென்றார்கள். அதன்பின் அவளைக் காணவில்லை. அவள் சித்திரவதைப்பட்டே இறந்திருப்பாள் என்றே போதகர் நம்பினார்.
""சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கின பின்பு, கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவ கிரீடத்தைப் பெறுவான்'' (யாக். 1:12)
* நம்பிக்கையில் ஆனந்தம் அடையுங்கள். துன்பத்தில் பொறுமையாய் இருங்கள். ஜெபத்தில் நிலைத்திருங்கள்.
* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் கடைபிடியுங்கள்.
- பைபிள்
0 comments:
கருத்துரையிடுக
ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....