பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன?
இன்றைய விசுவாசிகளில் பலர் தங்களுக்கு ஆவியானவரின் கிருபை கிடைத்திருப்பதாக நினைக்கிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லைதான். ஆனால் அதே ஆவியானவரின் கிருபை மற்றவருக்கும் உண்டு என்பதை அவர்கள் நினைப்பதில்லை. தேவ ஆவியானவர் பட்சபாதமுள்ளவரல்ல. தம்மை வாஞ்சையோடு தேடுகிற அனைவருக்கும் அவரது கிருபை உண்டு. எனவேதான் இயேசு இவ்வாறு கூறினார்.
யோவான் 7:37-39 இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்.
லூக்கா 11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
லூக்கா 8:18 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.
தாகம் என்பது வாஞ்சையைக் குறிப்பிடுகிறது. மேற்கூறிய வசனங்களின்படி பார்த்தால், யாருக்கெல்லாம் பரிசுத்தஆவியின் மீது மெய்யான வாஞ்சை இருக்கிறதோ அவர்கள் அனைவருக்கும் பரிசுத்தஆவி தாராளமாக வழங்கப்படும் என்பதே உண்மை.
பரிசுத்தஆவியை நாம் எப்படி பெறுகிறோம், பரிசுத்தஆவியை நாம் பெற்றுள்ளதை எப்படி அறிவது, பரிசுத்தஆவியை நாம் பெற்றுள்ளதை மற்றவர்கள் எப்படி அறிவார்கள், பரிசுத்தஆவி நமக்குள் வருவதை நம்மால் உணரமுடியுமா என்பது போன்ற பல கேள்விகளுக்கு, ஆளாளுக்கு ஒரு பதில் சொல்கின்றனர்.
பொதுவாக பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள் அந்நிய பாஷை பேசுவார்கள், தங்களை மறந்து பரவசமாக ஆடுவார்கள் எனும் பரவலான கருத்து நம்மிடையே காணப்படுகிறது. அந்நிய பாஷை பேசுதல் என்பது ஆவியின் வரங்களில் ஒன்றாக இருப்பது மெய்தான். அப்போஸ்தலரின் நாட்களில், ஒருவர் மீது பரிசுத்தஆவி இறங்குவதை மற்றவர்கள் அறியுமளவு, பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள் ஒரு வித்தியாசமான அனுபவத்தினுள் சென்றனர் என்பதும் உண்மைதான் (அப்போஸ்தலர் 8:18).
ஆனால், இந்நாட்களில் பரிசுத்தஆவியைப் பெறுபவர்களுக்கும் அதேவிதமான ஓர் அனுபவம் வரவேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. அப்போஸ்தலரின் காலம் வேறு, இன்றைய காலம் வேறு. அந்நாட்களில், பரிசுத்தஆவி பற்றிய அறிவு பலருக்கும் இல்லாததால், பரிசுத்தஆவி வருவதை அவர்கள் சரீரப்பிரகாரமாக உணரவேண்டியதாயிருந்தது. எனவேதான் பெந்தேகோஸ்தே நாளில் பலத்த காற்று அடித்து, வானத்திலிருந்து முழக்கம் உண்டாகி, அக்கினிமய நாவுகள் காணப்படுகையில் பரிசுத்தஆவி இறங்கியது. ஆனால் அதற்குப்பின் பரிசுத்தஆவி வரும்போது பெந்தேகோஸ்தே நாளில் நிகழ்ந்ததுபோல் நிகழவில்லை. ஒவ்வொருமுறை பரிசுத்தஆவி வரும்போதும் ஒவ்வொருவிதமான நிகழ்வுகள் நிகழ்ந்தன.
அப்போஸ்தலர் நடபடிகளில் பின்னால் போகப்போக, பரிசுத்தஆவி இறங்குகிறதைப் பற்றிய குறிப்புகள் அதிகமாகக் காணப்படவில்லை.
எனவே பரிசுத்தஆவி வரும்போது இப்படித்தான் நடக்கவேண்டுமென்கிற எந்த விதியும் கிடையாது.
இந்நாட்களில் பலரும், நான் அபிஷேகம் பெற்றுவிட்டேன், நீங்கள் பெற்றுவிட்டீர்களா என ஒருவருக்கொருவர் கேட்கும் ஒரு வழக்கம் காணப்படுகிறது.
அபிஷேகம் என்றால் என்ன? உச்சந்தலையிலிருந்து உடல்முழுவதும் தண்ணீரையோ பாலையோ அல்லது வேறு ஏதாவதையோ ஊற்றி கழுவுவதைதான் நீரபிஷேகம், பாலபிஷேகம் என்றெல்லாம் கூறுகிறோம். அதேவிதமாக, பரிசுத்தஆவி உச்சந்தலை முதல் உடல்முழுவதும் ஊற்றப்பட்டு அதைக்கொண்டு உடலை சுத்திகரிப்பதுதான் பரிசுத்தஆவியின் அபிஷேகமாகும். நடைமுறையில், இந்த அபிஷேகம் நமக்கு எவ்வாறு நடக்கும்? பின்வரும் வசனங்களைப் படிப்போம்.
எபேசியர் 5:25-27 அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
திருவசனத்தால் நம் உச்சந்தலை முதல் உடல் முழுவதும் (அதாவது நம் சிந்தனை முதல், உடலின் செயல்கள் வரை) கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்தமாவதன் மூலம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை நாம் பெறலாம். அதாவது பரிசுத்தத்தில் வாஞ்சை கொண்டு வசனங்களைக் கேட்டு அவற்றின்படி நடக்கும்போது, மேலும் மேலும் நாம் வசனங்களால் உணர்த்தப்பட்டு மேலும் மேலும் பரிசுத்தமாவதன் மூலம் நாம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைப் பெறலாம்.
இயேசுவைத் தவிர, மற்றவர்கள் அபிஷேகம் பெற்றதைக் குறித்து புதிய ஏற்பாட்டில் 3 வசனங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது.
2 கொரிந்தியர் 1:21 உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.
1 யோவான் 2:20 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.
1 யோவான் 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.
இம்மூன்று வசனங்களிலிருந்து நாம் என்ன அறிகிறோம்?
1. கிறிஸ்துவுக்குள் நாம் ஸ்திரப்படுவதன் மூலம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைப் பெறுகிறோம். கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுதல் என்றால், கிறிஸ்துவின் வசனங்கள் எல்லாவற்றின்படியும் நடப்பதிலும் கிறிஸ்துவுக்காக வாழ்வதிலும் ஸ்திரமாக (உறுதியாக) இருத்தல் என்பதே.
2. பரிசுத்தராலே அபிஷேகம் பெறும்போது நாம் சகலத்தையும் அறிந்தவர்களாகிறோம். “சகலத்தையும்” என யோவான் குறிப்பிடுவது “சகல சத்தியத்தையே” என 21-ம் வசனத்தில் பார்க்கிறோம். “சத்தியம்” என்பது எது? தேவனுடைய வசனமே சத்தியம் (யோவான் 17:17); அந்த வசனத்தினால்தான் நாம் பரிசுத்தமாக்கப்படவேண்டுமென்று யோவான் 17:19-ல் இயேசு கூறுகிறார். எனவே அபிஷேகம் என்பது, சத்தியமாகிய சகல தேவவசனங்களை அறிந்து அவற்றின்படி நடக்கக் செய்கிறது என அறிகிறோம்.
3. அவ்விதமாக சகல தேவவசனங்களாலும் நாம் அபிஷேகிக்கப்பட்டுவிட்டால், அதன்பின் வேறு யாரும் நமக்குப் போதிக்கவேண்டியதில்லை. ஆம், தேவவசனங்களுக்கு மிஞ்சின எந்தப் போதனையும் இல்லை. அந்தப் போதனையில் நாம் நிலைத்திருக்கவேண்டியதே நம் கடமை. அப்போது அந்த அபிஷேகம் நம்மில் நிலைத்திருக்கும்.
இவ்விதமான அபிஷேகத்தைத்தான் வேதாகமம் கூறுகிறது. அந்த அபிஷேகத்தின் அனுபவத்திற்குள் நான் அனுதினமும் கடந்து செல்கிறேன். அதாவது, வசனங்களை வாஞ்சையோடு தேடி, அவற்றின்படி நடக்க நான் வாஞ்சிக்கிறேன். தேவனும் என் வாஞ்சையை நிறைவேற்றி, நாளுக்குநாள் என்னை அபிஷேகத்தில் வளரச் செய்கிறார்.
இவ்விதமான பரிசுத்தஆவியின் அபிஷேக அனுபவத்தினுள் நான் நாள்தோறும் கடந்துகொண்டிருக்கிறேன்.
ஒருவேளை ஏதோ ஒரு குறிப்பிட்ட வேளையில் ஒரு பரவசமான அனுபவத்தின் மூலம் பரிசுத்தஆவியின் அபிஷேக அனுபவத்தினுள் நான் கடந்துசென்றுள்ளேனா என நீங்கள் கேட்டால், அக்கேள்விக்கு இல்லை என்றுதான் நான் பதில் சொல்வேன்.
நான் அறிந்தவரை, அப்படி ஒரு அபிஷேக அனுபவம் பற்றி வேதாகமத்தில் எந்த வசனமும் கூறவில்லை என நான் நம்புகிறேன். ஒருவேளை யாரேனும் அப்படி ஓர் அனுபவத்தைப் பெற்றிருந்தால், அவர்கள் எந்த ஆவியின் மூலம் அந்த அபிஷேகத்தைப் பெற்றனர் என்பதை நான் அறியேன்.
நீங்கள் சொல்லுவது சரி தான்
பதிலளிநீக்குமிக பயனுள்ள செய்தி
பதிலளிநீக்குமிக பயனுள்ள செய்தி
பதிலளிநீக்குTks bro
பதிலளிநீக்குneenga sonna anubavam enakkullum nadakkirathu. PRAISE THE LORD!
பதிலளிநீக்கு